Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

ஏன் தமிழர்கள் எழுத்தாளனுக்காக அழுவதில்லை?



இதை பற்றிப் பேசும் மனுஷ்யபுத்திரன் சில காரணங்களைத் தருகிறார். ஒவ்வொறாக பார்ப்போம்:


  1. தமிழ் வாழ்க்கை, தமிழ்ப்பண்பாடு, தமிழர் அரசியல் என எதனோடும் தொடர்பில்லாத ஒரு சிறு கும்பல் தங்களை நவீன இலக்கியத்தின் முகமாக முன்னிருத்தி வந்திருக்கிறது. ஒரு நவீன எழுத்தாளன் செத்தால் தமிழர்கள் அழுவதில்லை என்பது உண்மைதான். ஏனெனில் பெரும்பாலான நவீன எழுத்தாளர்களுக்கும் தமிழர்களின் பண்பாட்டு நீரோட்டங்களுக்கும் இடையே எந்த சம்பந்தமும் இல்லை.
  2. உயர்சாதி தன்னிலை அகங்காரங்கள் மட்டுமே இங்கு உலக இலக்கிய ரசனையாக முன்னிறுத்த பட்டிருக்கின்றன.
  3. தமிழில் பல முக்கியமான நவீன கவிஞர்கள் தொட்ட உயரங்களைவிட கண்ணதாசனும் வைரமுத்துவும் தொட்ட கவித்துவ உச்சங்கள் பிரமாண்டமானவை. இதை தமிழ்ச்சிறுபத்திரிகைச்சூழல் உறைந்திருக்கும் உயர்சாதி அகங்காரம் ஒருபோதும் ஏற்காது

இந்த மூன்று காரணங்களுடனும் எனக்கு உடன்பாடில்லை:

  1. தமிழ் வாழ்க்கை, தமிழ் மைய நீரோட்டம், பண்பாட்டுக் கூறுகளுடன் ஊடாடுகிற இலக்கியவாதிகளை தமிழர்கள் கொண்டாடுகிறார்களா?

பெத்தவன்கதை மூலம் தமிழ் சமூகத்தின் மனசாட்சியை ஓரளவுக்கு அசைத்தவர் என இமையத்தை சொல்லலாம். ஆனால் ஒரே படம் மூலம் மாரி செல்வராஜ் இமையத்தை விட லட்சம் மடங்கு அதிக கவனத்தை, புகழை, மதிப்பை, அங்கீகாரத்தை, விருதுகளைப் பெற்று விட்டார். மாரி செல்வராஜும் கூட ஒரு எழுத்தாளராக தமிழ் சமூகத்தை நெருங்கியதை விட பல கோடி மடங்கு ஒரு சினிமாக்காரராக நெருங்கி விட்டார்.

 சரி, இலக்கிய எழுத்தாளர்களை விடுங்கள் - வெகுஜன புகழ்பெற்ற எழுத்தாளர்களுக்கு வருவோம். சுஜாதாவும் பாலகுமாரனும் காலமான போது ஏற்பட்ட சலனத்தை சிவாஜியின் மரணத்தின் போது நிகழ்ந்தவற்றுடன் ஒப்பிட முடியுமா? சிவாஜிக்கு மெரீனாவில் சிலை வைத்த அன்று நான் அதைப் பார்க்க போயிருந்தேன். பல மணிநேரம் எங்குமே அசைய முடியாதபடிக்கு அப்படி ஒரு கூட்டம். யார் யாரோ நடிகர்கள் வருகிறார்கள் எனும் புரளியினால் ஏற்பட்ட கூட்டம். இதுவே சுஜாதாவுக்கு சிலை வைத்திருந்தால் வருமா? வரும், ரஜினியும் கமலும் கீர்த்தி சுரேஷும் இடுப்பு மடிப்பழகி ரம்யா பாண்டியனும் வருகிறார்கள் என்றால் சாலையில் கால் வைக்க முடியாபடிக்கு லட்சோபட்சம் தலைகள் தோன்றும். பாலகுமாரன் இறந்த போது அரசு மரியாதையுடன் அடக்கம் செய்தார்களா? அவரை விட அதிக வாசகர்கள் கொண்ட வேறு யார் இருக்கிறார்கள்?


 பிரபஞ்சனின் மரணத்தின் போது அந்த பாண்டிச்சேரி சமூகமும் அரசும் அளித்த மரியாதையை ஏன் தமிழகம் கொடுக்கவில்லை? பிரபஞ்சன் தமிழர்களைப் பற்றித்தானே எழுதினார்? - எப்படி பாண்டிச்சேரியில் ஒரு மரியாதை தமிழகத்தில் ஒரு மரியாதை என இருவேறாக ஒரே எழுத்துக்கு இருக்க முடியும்? பாண்டிச்சேரி மக்களின் பண்பாட்டு நீரோட்டங்களை மட்டுமே அவர் தொட்டாரா? இல்லையே.


வழக்கம் போல, கேரளாவுக்கு வருவோம் - அங்கு மிக பிரபலமாக இருக்கிற எழுத்தாளர்கள் மையப் பண்பாட்டின் கூறுகளை எழுத்தில் கொண்டு வந்தவர்களே அல்ல - எம்.டி தொடர்ந்து நாயர் சமூகத்தின் வீழ்ச்சியைத் தான் பேசிக்கொண்டு வந்தார், ஆனால் அவரை எல்லா சமூகத்து மலையாளிகளும் ரசிக்கிறார்கள். பிரியதர்சன், ஶ்ரீனிவாசன், .வி சசி, கமல், ரோஷன் ஆண்டுரூஸ், பத்மராஜன் போன்ற பிரசித்த பெற்ற இயக்குநர்கள் காட்டிய உலகுக்கும் எம்டியின் இலக்கியத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை; மோகன்லால், சுரேஷ் கோபி நடித்த படங்களுக்கும் அவரது இலக்கியத்துக்கும் சம்மந்தமில்லை - அவ்வளவு இருட்டான, கசப்பூறும் வாழ்க்கையை அவர் எழுதினார். ஆனால் அங்கே மோகன்லாலுக்கு இணையான புகழ் எம்.டிக்கு உள்ளது. எம்.டி முன்னே வந்து நின்று லால் எழுந்து வணக்கம் சொல்வார். இங்கே மனுஷ்யபுத்திரனைப் பார்த்ததும் அஜித் எழுந்து நின்று மரியாதை செலுத்துவாரா? அவர் தமிழ் புத்தகங்களில் எதையாவது படிக்கிறாரா? விஜய்க்கு தமிழ் நவீன கவிதை பற்றி எதையாவது தெரியுமா? இலக்கியம் பற்றித் தெரியாதது ஒரு அவமானம் என ஒவ்வொரு மலையாளியும் நினைக்கிறான்

அதிலும் கொடுமை, இங்கு அத்தகைய அறியாமை ஒரு பெருமை.


இன்னும் இலக்கியத்தனமாக, மிகுபுனைவை எழுதுகிற  ஒரு எழுத்தாளனுக்கு வருகிறேன் - .வி விஜயன். அவரதுகசாக்கிண்டே இதிகாசம்மேற்கத்திய இருத்தலிய படைப்புகளை ஒட்டி எழுதப்பட்டது. நேரடியான கேரள வாழ்க்கைக்கு சம்மந்தமில்லாதது. ஆனால் என் வகுப்பில் இருக்கும் கேரள மாணவர்களுக்கு (அறிவியல், வணிகவியல் படிப்பவர்கள்) எம்.டி மற்றும் .வி விஜயனின் பெயர்கள் தெரியும். படித்திருக்கிறார்கள். வெகுஜன பண்பாட்டுக் கூறுகளைத் தொடாத இலக்கிய படைப்பாளிகளை எப்படி அவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள்?


கர்நாடகாவிலும் இதுவே நிலைமை.


ஐரோப்பாவை எடுத்துக் கொண்டால் உம்பர்த்தோ ஈக்கோவின் Name of the Rose டேன் பிரவுனின் டாவின்ஸி கோட் அளவுக்கு பிரசித்தமான நாவல் அல்ல - ஆனால் ஐரோப்பாவில் டேன் பிரவுனை விட ஈக்கோவுக்கே மதிப்பு, அங்கீகாரம் அதிகம். ஒன்று வெகுசன புகழும் பெற்றிருப்பதாலே அது மகத்தானது என அங்கு கருதப்படுவதில்லை. மலையாளம், கன்னடத்திலும் நிலைமை இதுவே


 ஆனால் தமிழ் மாணவர்கள் கல்கியை கூட படித்திருப்பதில்லை, அப்பெயரும் தெரியாது


நான் இரு வருடங்களுக்கு முன்பு என் கல்லூரியில் ஒரு மொழியாக்க டாஸ்கை கொடுத்த போது 32 மாணவர்க்ள் சேர்ந்து எம்.டியின் நூல் ஒன்றை மலையாளத்தில் இருந்து ஆங்கிலத்தில் மொழியாக்கி அளித்தார்கள். இந்தி மாணவர்களோ பிரேம் சந்தின் 25க்கும் மேற்பட்ட கதைகளை மொழியாக்கினார்கள். இந்த கதைத் தேர்வை முழுக்க அவர்களே செய்தார்கள். ஆனால் நம் தமிழ் மாணவர்களுக்கு ஒரு தமிழ்க் கதை கூடத் தெரியவில்லை. அவர்கள் சுஜாதா, பட்டுக்கோட்டை பிரபாகரைக் கூடப் படித்ததில்லை. நானாக இரண்டு மாணவர்களுக்கு நவீன கதைகளைக் கொடுத்து மொழியாக்க செய்தேன். மற்ற மொழி மாணவர்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால் தமிழ் மாணவர்களுக்கோ தமிழ் சினிமாவைத் தவிர ஒன்றுமே தெரியாது.


இதைக் கூட விடுங்கள் - பத்தாண்டுகளுக்கு முன்பு நான் சென்னையில் ஒரு கல்லூரியில் பெரியாரின் பெயரைக் குறிப்பிட்டு அவர் யாரெனத் தெரியுமா எனக் கேட்க, 80 மாணவர்களில் ஒருவருக்குக் கூட பெரியாரைத் தெரியவில்லை. அண்ணாவையும் தெரியவில்லை. ஆனால்அண்ணா திமுகஎனக் கேட்டிருக்கிறார்கள். அவ்வளவுதான்; யாரெனத் தெரியாது. - ஆனால் அத்தனை பேருக்கும் எம்.ஜி.ஆரில் இருந்து விஜய் வரைத் தெரியும்


அதற்காக பெரியார் தமிழர்களின் வெகுமக்கள் உளவியல் இருந்து தன்னை துண்டித்துக் கொண்டார் என சொல்லலாமா? சிவாஜியை தெரிந்து வைத்திருக்கும் இளைஞர்களுக்கு அதே காலகட்டத்தை சேர்ந்த அண்ணாவைத் தெரியவில்லை? ஒரு முக்கிய காரணம் - ஊடகம். அண்ணா சினிமாவில் நடித்து எம்.ஜி.ஆர் அளவுக்கு பிரபல நடிகராகி இருந்தால் எல்லாருக்கும் இன்றும் அவரைத் தெரிந்திருக்கும். குணச்சித்திர நடிகராக இருந்தால் போதாது - சண்டை போடுகிற, டூயட் பாடுகிற, 30 வருடங்களுக்கு மேல் கோலோச்சிய நடிகனாக இருக்க வேண்டும்.

  1. உயர்சாதி தன்னிலை அகங்காரம் மட்டுமே இங்கு இலக்கிய ரசனை என மனுஷ் கூறுவது பிராமணீயத்தை எனப் புரிந்து கொள்கிறேன் - பிராமண ரசனை பின்னுக்குத் தள்ளப்பட்டு விளிம்புநிலை இலக்கியம் பிரதானமாகி 30 வருடங்கள் ஆகின்றன. ஆனால் மோசமான இடைநிலை சாதி அங்கீகாரம் தமிழ் சினிமாவிலும் அச்சு ஊடகங்களிலுமே அதிகமாய் கோலோச்சியது. இதைப் பற்றி நிறைய விவாதித்திருகிறோம் என்பதால் எந்த சாதி என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்
  2. தமிழின் முக்கிய நவீன கவிஞர்கள் தொட்ட உயரங்களை விட கண்ணதாசனும் வைரமுத்துவும் தொட்ட கவித்துவ உயரங்கள் பிரம்மாண்டமானவையா? ‘முக்கிய நவீன கவிஞர்கள்என்பதை மனுஷ்யபுத்திரன் பகடியாகவே சொல்கிறார் என நினைக்கிறேன். ஏனென்றால் இருவருமே பாடலாசிரியர்கள், கவிஞர்கள். ஒப்பீட்டுக்கே இங்கு இடமில்லை. இரண்டு பேருமே கவிதையைப் பொறுத்தமட்டில்சுட்டிக்குழந்தைகள்”. அற்புதமான பாடலாசிரியர்கள். நாம் அவர்களைக் கொஞ்சுவோம். ஆனால் வளர்ந்தவர்களாக மதிக்க மாட்டோம்.

கவிதை என்றால் என்னைப் பொறுத்தமட்டில் வடிவ ஒழுங்கு மற்றும் மொழியின் நுட்பமான (உள்முரண்களும் பூடகமும் கொண்ட) அர்த்த அடுக்குகள் கச்சிதமாக இணையும் ஒரு பிரதி. கண்ணதாசன் மற்றும் வைரமுத்துவிடம் ஒரு மன எழுச்சி, நுட்பமான அவதானிப்புகள் இருந்தன. அவை அவருக்கு முன்பு வந்த நாட்டுப்புற பாடலாசிரியர்களிடமும் இருந்தன. ஆனால் அவற்றை கவிதையாக்கும் அறிவோ பயிற்சியோ அவர்களுக்கு இல்லை


தமிழ் சமூகத்தின் சிக்கலே இவர்கள் இருவரையும் கவிஞர்களாக நாம் நினைத்ததே. என் அப்பா கூட கண்ணதாசனை மகத்தான கவிஞராக கருதினார். அவருக்கு அடுத்த தலைமுறையினர் வைரமுத்துவுக்கு அவ்விடத்தை அளித்தார்கள். அதற்கு அடுத்த தலைமுறை நா.முத்துக்குமாரையும், இப்போதைய தலைமுறை ஹிப்ஹாப் தமிழாவையும் கவிஞர்களாக போற்றுகிறார்கள். இது இப்படியே போய்க் கொண்டே இருக்கும். ஏனென்றால் இந்த ரசிகர்களுக்கு நவீன கவிதை என ஒன்று இருப்பதே தெரியாது.       


சரி, விசயத்துக்கு வருவோம்.

ஏன் இப்படி சினிமா பித்தர்களாக இருக்கிறோம்?

தமிழ் மனதுக்கு காட்சி ஊடகமே முக்கியமே, சினிமாவிலும் மக்களை நெருங்க திரையில் தோன்ற வேண்டும்; சும்மாவல்ல, நாயகனாக தோன்ற வேண்டும் - விசுவில், பாண்டியராஜன், பாக்யராஜ், பாரதிராஜாவில் இருந்து சீமான், ராம், மிஷ்கின் வரை அதிகம் மக்களுக்கு நெருக்கமானது நடிப்பு வழியாகவே. சினேகன், பா. விஜய் போன்ற பாடலாசிரியர்கள் ஏன் நாயகனாக முயன்றார்கள்? ஆயிரம் பாடல் எழுதிப் பெறுகிற புகழை ஒரு படத்தில் நாயகனாகி பெற்று விடலாம். அதற்குத் தான். பேஸ்புக் பிரபலங்களை விட டிக்டாக் பிரபலங்கள் எப்படி எளிதாக மக்களை சென்று அடைந்தார்கள்? இதே காரணம் தான் - தமிழர்களுக்குகாட்சியேமுக்கியம். நாம் ஒரு காட்சிவழி சமூகம்.


இது ஓரு முழுப்பூசணிக்காய் உண்மை - இதை நாம் சோற்றுக்குள் மூடி மறைக்க முயலக் கூடாது. ஒத்துக் கொள்ள வேண்டும். இதற்குக் காரணம் என எழுத்தாளர்களை சாடவும் கூடாது. இலக்கிய எழுத்தாளன் எந்த சமூகத்திலும் சமரசங்கள் செய்வதோ வெகுமக்களின் பண்பாட்டை பிரதிபலிப்பதோ இல்லை. அப்படி பிரதிபலித்தாலும் அவனால் வெகுமக்களிடம் போய் சேர முடியாது. இது எதார்த்தம். சமூகமே மாறாக எழுத்தாளனிடம் வர வேண்டும், அவனைக் கொண்டாட வேண்டும். எதற்கு?


தம் பண்பாட்டை முன்னெடுக்க, அதில் பெருமை காண. தமிழில் ஏனோ இந்த பண்பாட்டு ஓர்மை இல்லாமல் இருக்கிறது.

ஏன் சுஜாதா அளவுக்கு சு.ரா படிக்கப்படவில்லை என்பதோ, ரஜினி அளவுக்கு ஏன் சுஜாதாவுக்கு புகழ் இல்லை என்பதோ அல்ல கேள்வி இங்கு. புகழ் அல்ல அங்கீகாரமே இங்கு பிரச்சனை. எந்தவித பண்பாட்டு அறிவு, அரசியல் அறிவுக்கும் இங்கு மதிப்பில்லை என்பதே பிரச்சனை.


ஒவ்வொரு சமூகத்திலும் கேளிக்கைக்கு ஒரு இடம் இருக்க வேண்டும். ஆனால் அது மட்டுமே போதாது. இப்போதைக்கு தமிழ் சமூகத்தில் அது மட்டுமே உள்ளது. ஆக, சாரு சொல்வது முழுக்க முழுக்க உண்மை. இது ஒரு லும்பன் சமூகம். இது ஒரு குஷ்ட ரோகிகளின் கூடாரம். ஒத்துக்கொள்வோம்


 இந்த சமூகத்துக்கு என ஒரு அடையாளம் காணப்படாத நோய்மை உள்ளது. அதனாலே பண்பாடு சார்ந்த ஒரு பெருமை இங்கு மக்களுக்கு இல்லை. திருவள்ளுவரை யாராவது அவமதித்தால் எத்தனை பேருக்கு இங்கு கோபம் வரும்? மிக மிகக் குறைவாகவே மக்கள் வள்ளுவரை மதிக்கிறார்கள். மோடி இது தெரியாமல் போகிற இடமெல்லாம் குறளை மேற்கோள் காட்டுகிறார். அதனால் எந்த பயனும் இல்லை. ஆனால் தமிழர்களை மோடியை விட தோனிக்கு நன்றாகத் தெரியும் - அவர் ரஜினி வசனத்தை பேசிக் காட்டி, உடனடியாய் பலகோடி மக்களின் மனங்களை வெல்லுகிறார்.


 ஜல்லிக்கட்டு போன்ற பழங்குடி சமூக விளையாட்டுகளுக்கு ஒரு மதிப்பு இருக்கிறது. மற்றபடி தமிழர் உயர்ந்தவர்கள் எனும் ஒரு கற்பிதம், வெற்றுப் பெருமை இருக்கிறது. அதை மயிலிறகால் வருடினால் கைதட்டுவார்கள். ஏன் உயர்ந்தவர்கள் எனக் கேட்டால் எடுத்து காட்டுவதற்கு இவர்களுக்கு ஒன்றும் தெரியாது

இந்த மாபெரும் சமூக உளவியல் கோளாறின் ஒரு பகுதியாகவே இலக்கியவாதிகள் மதிக்கப்படுவதில்லை எனும் பிரச்சனை, அது சார்ந்த பிலாக்கணம் வருகிறது

 (இது என்ன, எப்படி ஏற்பட்டது என்பதை சமூகவியல் அறிஞர்களும் சமூக உளவியல் அறிஞர்களுமே கண்டுபிடிக்க வேண்டும்.)


என்னிடம் கேட்டால், தமிழ் உடலை பாதித்திருக்கும் நோயின் அறிகுறி தான் இலக்கிய, அரசியல், உயர்கலாச்சார அக்கறையின்மை. அந்த நோய் குணமாகாமல் இலக்கியம் மட்டுமல்ல எந்த பண்பாட்டு வெளிப்பாடும் கவனிக்கப்படாது.

 நம்மைப் போன்ற விதிவிலக்குகள் இந்த நோய்மையை அடையாளம் காணத் தோன்றியவர்கள். நாம் இச்சமூகத்துக்காக நம்மை பலிகொடுக்க கடவுளால் அனுப்பி வைக்கப்பட்ட ஏலியன்கள் (நீட்சே சொன்னதைப் போல). நாம் இவர்களுடன் கலந்து இவர்களைப் போன்றே சிந்தித்து செயல்பட்டு இவர்களுடைய பிணிநீக்கவும் முயல்கிறோம். ஒருநாள் நாம் ஜெயிப்போம். அதற்கு இன்னும் சில நூறு ஆண்டுகள் ஆனாலும் பரவாயில்லை. நாம் ஜெயிப்போம்!  


நானும் ஒரு வெகுஜன ஆள், நான் ஒரு சாமான்யன் எனச் சொல்வது ஒரு சமூகவிரோத நிலை.

 

ஒரு வெகுசனக்கவிஞனுக்கு பிறந்த நாள் கொண்டாடினாலும் சரிஒரு வெகுசனக் கலைஞனுக்கு அஞ்சலி செலுத்தினாலும் சரி 'அச்சச்சோ உன்னத கலைக்கு தீட்டுப்பட்டுவிட்டது' என்று பதறுவதெல்லாம் பரிதாபத்திற்குரியது.” என மனுஷ் சொல்வதை நாம் இப்படி மாற்றி சொல்வேன் - நாம் பதறுவது உன்னத கலைக்காக அல்ல, இந்த சமூகத்துக்காகத்தான். 500-1000 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சமூகத்தில் சாதி, வர்க்க ஏற்றத்தாழ்வுகள், பண்பாட்டு அறிவீனம் இந்தளவுக்கு இருக்காது. அன்று தமிழர் இயல்பாகவே தம்மை பண்பாட்டு பெருமை மிக்கவராய் நினைத்து, இலக்கியத்தையும் இசையையும் ஓவியத்தையும் கொண்டாடுவார்கள். அன்று வருகிற நம்மில் ஒருவன் இப்படி பதற வேண்டிருக்காது. அவன் நீட்சே சொல்லுகிற அதிமனிதனாக இருப்பான். அன்று இந்த சமூகமும் அதற்குத் தயாராக இருக்கும். அன்று வெகுசனக் கவிஞனுக்கு பணமும் புகழும் இருக்கும், ஆனால் மரியாதையும் இடமும் அவனுக்கு புழக்கடையில் தான் இடமிருக்கும். புகழுக்கு பண்பாட்டு மதிப்புக்குமான வித்தியாசத்தை தமிழன் அறிந்திருப்பான்.  


எஸ்.பி.பிக்காக நானும் அழுதேன். ஆனால் அவர் ஒரு மகத்தான பாடகர் என நான் சொல்ல மாட்டேன். எஸ்.பி.பியே சொல்ல மாட்டார். இந்த தருணத்தில் ஒரு சமூகமே அதிகமாய் உணர்ச்சி வசப்படுகிறது என்பது உண்மை தான். அவருக்கு பாரத ரத்னா கொடுக்க வேண்டும் எனக் கோரும் கங்கை அமரன் வேறெந்த இசை, இலக்கியக் கலைஞருக்காக அப்படிக் கோரி இருக்கிறார்? இது மிகை இல்லையா சொல்லுங்கள்! ஒரு பண்பட்ட சமூகத்தில் சினிமாக் கலைஞர்கள் கொண்டாடப்படுவார்கள். ஆனால் அவர்களை விட சினிமாவுக்கு வெளியே உள்ள கலைஞர்கள் வணங்கப்படுவார்கள்


Comments

Tirupati Mahesh said…
நல்ல அலசல் சார்.
Murugan R.D. said…
1) இரண்டு பேருமே கவிதையைப் பொறுத்தமட்டில் “சுட்டிக்குழந்தைகள்”. அற்புதமான பாடலாசிரியர்கள். நாம் அவர்களைக் கொஞ்சுவோம். ஆனால் வளர்ந்தவர்களாக மதிக்க மாட்டோம்.///////////// நாம் என்றால் யாரு எழுத்தாளர்களா? அவர்களை ஒரு தேர்ந்த எழுத்தாளன,வாசகன விட படிப்பறிவு, எழுத்தறிவு, வாசிப்புபழக்கம் இல்லாத பாமரன் கூட பிரிச்சி மேய்வான்,, சுட்டிக்குழந்தைகள்னு சொல்றதெல்லாம் ஒரு விதமான சைக்கோதனமா படுது,

2)னால் மோசமான இடைநிலை சாதி அங்கீகாரம் தமிழ் சினிமாவிலும் அச்சு ஊடகங்களிலுமே அதிகமாய் கோலோச்சியது. இதைப் பற்றி நிறைய விவாதித்திருகிறோம் என்பதால் எந்த சாதி என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன். ///////////// சமூகத்தையே புரட்டிப் போடும் எழுத்தாள சமூகம்னு பெருமை பேசிக்கொள்ளும் சமூகம் ஏன் இதை மட்டும் படிப்பவர்கள் கற்பனைக்கே விட்டுவிடுது, ஒரு வேளை படிப்பவர்கள் எழுத்தாளர்கள் மட்டுமே என்ற முடிவா,,

3) பத்தாண்டுகளுக்கு முன்பு நான் சென்னையில் ஒரு கல்லூரியில் பெரியாரின் பெயரைக் குறிப்பிட்டு அவர் யாரெனத் தெரியுமா எனக் கேட்க, 80 மாணவர்களில் ஒருவருக்குக் கூட பெரியாரைத் தெரியவில்லை.
அதற்காக பெரியார் தமிழர்களின் வெகுமக்கள் உளவியல் இருந்து தன்னை துண்டித்துக் கொண்டார் என சொல்லலாமா?//////// இதில் அதிசயம் ஒன்றுமில்லை,, இப்ப சமூக ஊடகங்களில் பெரியார் மட்டும் இல்லைன்னான்னு கம்பு சுத்துற கூட்டம் இல்லன்னா இப்பவும் ஈவேரா யாருன்னு இங்க சராசரி மனிதனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை, அது அவர்கள் செய்யும் குற்றமுமில்லை

4) ஆனால் தமிழ் மாணவர்கள் கல்கியை கூட படித்திருப்பதில்லை, அப்பெயரும் தெரியாது. ////////////////// அவசியமேயில்லை,, தமிழ் மாணவர்கள் கடந்த அறுபது ஆண்டுகளாக கல்வி, பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என்ற வேட்கையுடனே வளர்க்கப்படுகிறார்கள்,, அதனால் இது போன்ற பொழுதுபோக்குகளை தவிர்திருக்கலாம்,,, தப்பேயில்லை

5) ஜய்க்கு தமிழ் நவீன கவிதை பற்றி எதையாவது தெரியுமா? இலக்கியம் பற்றித் தெரியாதது ஒரு அவமானம் என ஒவ்வொரு மலையாளியும் நினைக்கிறான். /////////
ஒவ்வொரு மலையாளியும் நினைக்கிறான்னு சொல்றதெல்லாம் கொஞ்சம் ஓவர்,, இலக்கியம், எழுத்துஉலகு என்று எதையும் அறியாத மலையாளிகள் எழுத்துலகை வாசிக்கும் வாசகர்களை விட மிகமிக அதிகமாகவே இருக்கும்,,, கேரளா பற்றி பில்டப்பு எழுத்தாள மற்றும் முற்போக்கு இயக்கவாதிகளிடையே ரொம்ப அதிகமா இருக்கு,,, இது கிட்டதட்ட ஒரு மனபிரமை அல்லது தன் அறிவாளிதனத்த
காட்டிக்கொள்ளும் போக்கு,

6)பாலகுமாரன் இறந்த போது அரசு மரியாதையுடன் அடக்கம் செய்தார்களா?/////////இதெல்லாம் ரொம்ப ஓவருங்க,,, உங்களுக்கே கூச்சமாயில்லையா இப்படி கேட்பதற்கு

7)என்னிடம் கேட்டால், தமிழ் உடலை பாதித்திருக்கும் நோயின் அறிகுறி தான் இலக்கிய, அரசியல், உயர்கலாச்சார அக்கறையின்மை. அந்த நோய் குணமாகாமல் இலக்கியம் மட்டுமல்ல எந்த பண்பாட்டு வெளிப்பாடும் கவனிக்கப்படாது.////////// பாதிப்பு தமிழ் உடலுக்கு இல்லை எழுத்தாளரே,,, இங்க உள்ள எழுத்தாளர்களின் மனதிற்குதான் ஐ மீன் மூளைக்குதான் ஐ மீன் வாட் ஐ மீன் இஸ் கொஞ்சம் இல்ல நிறையவே மூளைவளர்ச்சியற்றவர்களா எழுத்துலகை பற்றி அதீதமாக கற்பனை பண்ணி வெறுமையில் புலம்பி தள்ளுவது, கிட்டதட்ட திண்ணைகிழவி புலம்பும் புலம்பல்களுக்கு நிகரானது தமிழக எழுத்தலத்தினர் ஒப்பாரி,,ஓலம்,, சகிக்கல

7 1/2. இந்த தருணத்தில் ஒரு சமூகமே அதிகமாய் உணர்ச்சி வசப்படுகிறது என்பது உண்மை தான். ////////// இது உண்மைதான்,,, ஆனா இப்படிப்பட்ட ஒரு சம்பவத்தைதான எழுத்தாளர்களின் விசயத்திலும் நடக்கவேண்டும்னு எதிர்பார்க்கிறீங்க,,

Murugan R.D. said…
(((இந்த கருத்து உங்களுக்கு எரிச்சலூட்டலாம்,, ஆனா உண்மைய உணருங்க,, நானும் ஒரு காலத்தில் பல நூல்களை விழுந்து விழுந்து படிப்பவன்தான், என்னை புத்தகப்புழு என்று தான் நண்பர்கள் சொல்வார்கள்,, தொலைக்காட்சி, சமூகவலைதளம், வேலை, குடும்பம்னு நெருக்கடி பெருக பெருக புத்தக வாசிப்பு பழக்கம் இல்லாமல் போய்விட்டது,, அந்த ஆசையை முற்றிலும் இல்லாமல் ஆக்கியதில் இங்க சமூக வலைதளங்களில் எழுத்தாளர்கள் புத்தக எழுத்தை தாண்டி எழுதும் சில புலம்பல் கட்டுரைகள்தான் முக்கிய காரணம், தமிழ் சமூகத்தை பற்று புலம்பும் புலம்பல் முக்கிய காரணம்,, ஐய்யயோ இந்த தமிழ் சமூகம்,, ஐய்யய்யோ நான்காவது தூண்,, ஐய்யய்யோ எங்கள யாரும் மதிக்கல,, ஐய்யய்யோ இந்த தமிழ்சமூகம் நாசமா போகட்டும்னு இவர்கள் வைக்கிற ஒப்பாரியும், ஓலமும் தான் தமிழ்சமூகம் எழுத்துலகை விட்டு ஒதுங்கி போக காரணம்,, புத்தகம் படிக்கும் நேரத்தை அவர்கள் தங்களில் வாழ்க்கைக்கு தேவையான ஆக்கப்பூர்வமான விசயங்களில் ஈடுபட, முன்னேற பயன்படுத்திக்கொள்கிறார்கள்,, நல்ல விசயம்தான்,,

எனவே தமிழ் சமூகத்தை பற்றி எழுத்துல கிங்கரர்கள் புலம்பாமல் தங்கள் பிழைப்பை மட்டும் பார்த்துக்கொள்வது இந்த எழுத்துலகுக்கும், அவர்களின் புகழுக்கும் ஏற்படுத்தும் களங்கத்திலிருந்து காப்பாற்றும்,,,,))))

(குறிப்பு இது எழுத்தாளரா உங்களுக்கு மிகமிக கசப்பா இருக்கும், ஆனா இங்க சராசரி மனிதனுக்கு உள்ள பொறுப்பையும், அவனுக்கு ஏற்படும் நெருக்கடியையும், உளவியல் சிக்கலையும் யோதித்துப்பாருங்க,, வெளிநாட்டு எழுத்தாளர், படைப்புன்னு பேசுகிற எழுத்தாளர்களிடம் கேட்கிறேன்,, அந்த வெளிநாட்டுல வேறநாட்டு (ஏன் நம்ம இந்திய எழுத்தாளன்னு வச்சுக்கோங்களேன்) எழுத்து படைப்பை அந்நாட்டு எழுத்தாளர்கள் உங்க அளவுக்கு கொண்டாடுறாங்களா? இல்ல அடிக்கடி இந்தியால சாருன்னு ஒரு எழுத்தாளர் சொன்னார்னு ஆரம்பிச்சி பொங்கல் வைக்கிறாங்களா? என்னமோ போங்க,, தமிழ் எழுத்தாளர்கள்லாம் தனி ஒரு உலகத்தில்தான் கற்பனையில் மிதந்துகிட்டிருக்கீங்க,,,))

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...