முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கணேசகுமாரனின் “சிலிங்”



கணேசகுமாரனின் ஒரு சிறப்பு என்னவென்றால் அவரது சிறுகதைகளுக்கு ஒரு களமும் மொழியும் உண்டெனில் அதில் இருந்து விலகி இன்னொரு மொழியில் களத்தில் குறுநாவல்கள் எழுதுவார். அவற்றுக்கும் சம்மந்தமில்லாமல் முற்றிலும் புதிதாக அடுத்ததொரு குறுநாவலைப் படைப்பார். இதையெல்லாம் கணேசகுமாரன் திட்டமிடாமல் தன்போக்கில் செய்கிறார்; இப்படி தான் செய்வதையே அவர் உணர்வதில்லை என நினைக்கிறேன். “மெனிஞ்சியோமா” அப்படியான ஒரு குறுநாவல் தான். இப்போது வந்துள்ள “சிலிங்” இன்னும் ஒரு படி மேலே போய் தமிழில் இதுவரை யாருமே முயன்று பார்க்காத ஒரு கதைக்கருவை, ஒற்றை வரியை எடுத்தாள்கிறது.

 ஒரு மனநோயாளி, அவனுக்கு உளவியல் ஆலோசனை வழங்கும் ஒரு மனநல ஆலோசகர். ஆலோசகர் மிகுந்த புரிந்துணர்வும் கருணையும் கொண்டவராக காட்டப்படுகிறார். மனநோயாளி தடுமாற்றமும் குழப்பமும் தன்னிரக்கமும் கொண்டவனாக வருகிறான். ஒரு கட்டத்தில் இந்த ஆலோசகரின் சிக்கல்கள் பேசப்படுகின்றன. இன்னதென்று வரையறுக்க முடியாத அகச்சிக்கல்களில் அவர் மாட்டிக் கொள்கிறார். அவருடைய வாழ்க்கையில் நடக்கிற சில அபத்தமான சம்பவங்களும் அவரை கடும் நெருக்கடிக்குள் தள்ளுகின்றன. நாவல் முடியும் போது ஆரம்பத்தில் வந்த மனநோயாளி நாம் எதிர்பார்த்த ஆளல்ல, அவன் ஒரு தந்திரசாலி என சொல்லப்படுகிறது. இது தமிழ் இலக்கியத்துக்கு முற்றிலும் புதிதான ஒரு கரு - ஒருவருடைய தான் எனும் நிலை, அவருடைய தான்-மை (subjectivity), மற்றொருவருடைய தொடர்பால் உருமாறி, இரு தான்-மைகளும் இரண்டறக் கலப்பது, ஒருவர் மற்றொருவராக ஆவது என்பது நகுலன், ஓரளவுக்கு மௌனி ஆகியோரால் (பின்னர் சாருவாலும்) புனைவில் பேசப்பட்டிருக்கிறது என்றாலும் இது இப்போதும் தமிழுக்கு முற்றிலும் புதிதான ஒரு விசயம் தான். பொதுவாக நாம் இங்கு குடும்பக் கதை, சாகசக் கதை, பழிவாங்கும் கதை, காதல் கதை, இழப்பின் கதை, சமூக அவலக் கதை, வரலாற்று மாந்தர்களின் வீர சோக காவியங்கள் ஆகியவற்றை தாம் திரும்பத் திரும்ப எழுதி வந்திருக்கிறோம். “சிலிங்” இந்த டெம்பிளேட்டை உடைக்கிறது.


 இதை நான் நமது புனைவு மரபை விமர்சிப்பதற்காக அல்ல, புரிந்து கொள்ளவே சொல்கிறேன். வழிவழியாக எழுதப்பட்டதை புதிய மொழியில், நிறத்தில் திரும்ப எழுதுவதே எளிது. ஆனால் ஒருவர் இந்த டெம்பிளேட்டை உடைக்க முயல்கையில், ஒரு உளவியல்-தத்துவ நெருக்கடியை புனைவாக்கும் போது அவருக்கு எங்கு போய் நிற்பது, எப்படி பயணிப்பது எனும் நெருக்கடி ஏற்படுகிறது. இதுவே கணேசகுமாரன் இந்த நாவலில் எதிர்கொள்வது எனத் தோன்றுகிறது. தான்-மை ஒழுகி ஓடும் ஒன்றாக, சாராம்சமற்றதாக இருக்கையில் ஒருவருடைய இருப்பு அங்கு என்னவாகும் என்பது ஒரு அபாரமான தத்துவப் பிரச்சனை. அது தஸ்தாவஸ்கி போன்ற ஒரு மேதை எழுத வேண்டியது. தமிழில் அப்படி ஒரு விசயத்தை ஒருவர் எடுத்துப் பேசுவதே பாராட்டத்தக்கது தான். இந்த பின்னணியில் தான் எனக்கு இந்த நாவல் மிகுந்த மகிழ்ச்சியளித்தது; யாருமே பறிக்க முயலாத மலர் மீது கணேசகுமாரன் தன் விரல்களை வைத்திருக்கிறார். அவர் அதைப் பறிப்பதில் சில தடுமாற்றங்கள் இருக்கலாம், ஆனால் அவர் இதை செய்திருப்பதே ஒரு முக்கிய சாதனை என நினைக்கிறேன்.


இன்னும் சிறப்பாக எழுதப்பட்டிருக்கலாம் எனும் புகார்களைத் தாண்டி “சிலிங்” நாம் அனைவரும் ஒருமுறை படித்துப் பார்க்க வேண்டிய நாவல் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. இந்நாவலை வெறுமனே ஒரு எதார்த்தக் கதையாகப் படிப்பதும் நியாயமல்ல!


பி.கு: தலைப்பு தான் கடைசி வரை எனக்குப் புரியவில்லை.

கருத்துகள்

J. ADALARASAN இவ்வாறு கூறியுள்ளார்…
எழுத்தாளர்களுக்கு எழுதப்பட்ட
நாவல் மொனி நகுலன் என்று
குறிப்பால்‌ உணர்த்தி காத்தமைக்கு
நன்றி

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...