இன்று இந்திய கிரிக்கெட்டில் மிகச்சிறப்பாக டைம் பண்ணுகிறவர் ரஜத் பட்டிதார்தான். அதாவயது ஷுப்மன் கில்லைவிட மேலாக பந்தை தொட்டுச் சீற வைக்கும் ஆற்றல் படைத்தவர். பட்டிதாரிடம் உள்ள ஒப்பற்ற ஆற்றல் அவரால் பந்தை மிகமிகத் தாமதாக அடிப்பதைப் போலத் தோற்றமளிக்கும் ஷாட்களை ஆட முடிகிறது என்பது. இது முன்பு ஏ.பி டிவில்லியர்ஸின் மட்டையாட்டத்தில் துலங்கும் பேரழகு. அவரால் கடைசி நுண்நொடி வரை பந்தை வரவிட்டு தன் மணிக்கட்டின் தளர்வை பயன்படுத்தி தோன்றும் திசையில் ஆற்றலுடன் டைமிங் செய்து விளாச முடிகிறது. பார்க்க கொள்ளை அழகாக இருக்கிறது. அவரது இன்னொரு சிறப்பு அவர் மட்டையை கிடைநிலையில் (horizontal) ஆகப் பிடிக்கும் விதம் - அவரது இயல்பான மட்டையைப் பிடிக்கும் கோணமே ஸ்கொயர் கட் அடிக்கும் நிலைதான். அதிலிருந்துதான் அவர் பந்தை நேராக அடிக்கவோ கவர் பகுதியில் விரட்டவோ அப்பர் கட் அடிக்கவோ ஸ்கூப், ஸ்வீப் ஸ்கூப் போன்ற ஷாட்களை அடிக்கவோ நேராக துப்பாக்கி ரவையைப் போல ராக்கேட் வேகத்தில் சிதறவிடவோ வேண்டும். ஒவ்வொரு ஷாட்டுக்கும் அவரது மணிக்கட்டு சற்றே தளர்த்தி மட்டையின் திசையை நுணுக்கமாக மாற்றுகிறார். ஆனால் அவர் எந்த ஷாட்டை ஆடினாலும் மட்டை (செவ்வியல் பாணியில்) நேராக இருக்காது. கிடைமட்டத்திலே இருக்கும். இதனாலோ ஏனோ அவரால் பிரமாதமான ஆற்றலை உற்பத்தி பண்ண முடிகிறது.
இதற்கு முன் இப்படி ஆடுபவராக கெவின் பீட்டர்ஸன் இருந்தார். இப்படியான high backlift லாரா, சச்சின், யுவ் ராஜ் போன்றவர்களுக்கு இருந்தாலும் அவர்கள் விரட்டவோ தடுப்பாடவோ நேரும்போது மட்டையை நேர்கோணத்திற்கு கொண்டு வந்துவிடுவார்கள். ஆனால் பட்டிதார் அவர்களிடையே தனித்துவமானவர். அவரது மட்டையில் பந்து படும்போது எழும் ஒலி சாட்டை மரத்தில் சொடுக்குவதைப் போல தனியாக எழுகிறது, அது காதுக்கு அவ்வளவு இனிமையாக சிலிர்ப்பாக இருக்கிறது. பந்து ஆவேசமாக அவரது மட்டையில் முத்தம் கொடுத்துவிட்டு மைதானத்திற்கு வெளியே பறந்துபோய் விழுவதைப் போல, உச்சம் பெற்ற காதலில் தளர்ந்து போய் விழுவதைப் போல. எவ்வளவு ஆண்மையான ஆட்டம்!
கருத்துகள்