முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜெனசிஸ்



 குத்துச்சண்டைப் பயிற்சியை கடந்த ஆண்டின் துவக்கத்தில் தொடர முடியாத நிலை அலுவலக வேலைப்பளு அதிகமானதால் ஏற்பட்டது. அதனால் வீட்டில் இருந்து பயிற்சி செய்து கொண்டிருந்தேன். அப்போது கூட சில தவறுகள் செய்து லேசான தோள் காயம் ஏற்பட்டது; மூன்று வாரங்கள் வலது தோளை குத்துச்சண்டைக்கும் எடை தூக்கும் பயிற்சிக்கும் பயன்படுத்தக் கூடாது என்றார்கள். அதனால் நான் இடதுகையால் மட்டுமே தொடர்ந்து பயிற்சி எடுத்தேன். காயத்தில் இருந்து மீண்டு வந்த பின்னர் நான் ஒன்றைக் கற்றுக் கொண்டேன் - குத்துச்சண்டைக்காக தோளை வலுப்படுத்த தனியாகப் பயிற்சி எடுக்க வேண்டும். தினமும் அதில் கவனம் செலுத்துவது, நாவல் எழுதுவது, புது வேலை தேடுவது என என் மாலைப் பொழுதுகள் போயிற்று. பெங்களூரில் இருந்து மைசூர் வந்தபோது இங்கு நேரம் கிடைத்தாலும் சரியான பயிற்சியாளர்கள் கிடைக்க மாட்டார்களே என வருத்தமாக இருந்தது. நான் நினைத்தது சரிதான்.

ஒரு பக்கம், இது பயங்கரமாக இறுகிப் போன ஊர். சுலபத்தில் பயிற்சி தேடி வருவோரை எடுத்துக் கொள்ள மாட்டார்கள். போய்க் கேட்டுவிட்டு காத்திருக்க வேண்டும். இன்னொரு பக்கம், மைசூரில் எம்.எம்.ஏதான் பிரபலம். குத்துச்சண்டைக்கு ஆட்கள் இல்லை. அதனால் தேடிக் கொண்டே இருந்தேன். ஒன்று பயிற்சி மையங்கள் மாடியில் இருந்தன. அல்லது அங்கு குத்துச்சண்டை தனியாகச் சொல்லித் தர மாட்டார்கள். கடைசியாக ஜெனசிஸ் எனும் பயிற்சி மையம் பற்றி இன்ஸ்டாவில் பார்த்தேன். அங்கிருந்தவர்கள் சற்று முற்போக்கான பயிற்சியாளர்கள். மற்ற குழந்தைகளுடன் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கும் பயிற்சியளிக்கிறார்கள். அவர்களிடம் விசாரித்தபோது ஒப்புக்கொண்டு வரச் சொன்னார்கள். நான் சென்று பார்த்தபிறகு எனக்குப் பயிற்சியளிப்பதால் எதாவது பிரச்சினை வருமா (அதாவது எனக்குத்தான்) என்று ஐயப்பட்டார்கள். அதாவது நான் விழுந்து விடுவேனோ எனக்கு அடிபட்டு விடுமோ போன்ற பயங்கள். நாற்பது வருடங்களுக்கு மேலாக நான் எதிர்கொண்டு வரும் சந்தேகங்கள். என் முன்னாள் பயிற்சியாளருடைய எண்ணைக் கொடுத்து இவர்களை அவரிடம் பேசக் கேட்டேன். கூடுதலாக என் பழைய குத்துச்சண்டை ஸ்பாரிங் காணொளிகளையும் கொடுத்தேன். காணொளிகள் நம்பிக்கையை அளிக்க என்னை ஏற்றுக் கொண்டார்கள்.
இங்கு வாரத்தில் இரண்டு நாட்களே குத்துச்சண்டைப் பயிற்சி. மீதி நாட்களில் உதைப் பயிற்சி, மல்யுத்தம், ஜுஜுட்ஸு போன்றவை. குத்துச்சண்டையிலும் தொழில்நுட்பத்திலும் உத்தியிலுமோ அதிக கவனம் செலுத்துகிறார்கள். நான் முன்பு பயின்ற இடத்தில் குத்தும் முறைகளுடன் ஸ்பாரிங் எனும் சண்டைப் பயிற்சிக்கு அதிக இடமளிப்பார்கள். அங்கு அடிக்கடி அடிப்பதும் அடிபடுவதுமே அனுபவமாக இருந்தது. அது ஒரு பயங்கரமான அனுபவம். தீவிரமாக இருத்தலை அறிவதற்கு சண்டைதான் சிறந்த வழி என்று எனக்கு அது தோன்ற வைத்தது. இங்கு நேர்மாறாகத் திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்துகிறார்கள்.
ஒரு கல்லூரிக்குச் சென்று முறையாகப் பயில்வதைப் போன்ற அனுபவம்; போனதுமே வார்ம் அப், அடுத்து தோளைத் திடப்படுத்தும் தாங்கு திறன் பயிற்சி. அதாவது 15-20 நிமிடங்கள் ரிங்கில் களைக்காமல் ஆடுவதற்குமான குத்தும் பயிற்சி. அதன்பிறகு பலவிதமான காம்பினேஷன்களைப் பயிற்றுவிப்பார்கள். மூன்று நிமிடப் பயிற்சிக்கு ஒரு நிமிட இடைவெளி. இப்படியே ஒன்றரை மணிநேரத்துக்கு மேல் போகும். அதன்பிறகு உடற்பயிற்சி, ஸ்டிரெட்சிங். அடுத்தடுத்த நாட்கள் என் வீட்டு குத்தும் பையில் வகுப்பில் கற்ற காம்பினேஷன்களைப் பழகுவேன். ஆரம்பத்தில் என்னால் ஒரு நிமிடத்திற்கு மேல் தொடர்ந்து குத்திப் பயில முடியவில்லை. அதாவது வேகமாக வலுவாகக் குத்தும் பயிற்சியிருந்த எனக்கு குறைந்த வலுவுடன் குத்திக் கொண்டே இருப்பது கடினமாக இருந்தது. வீட்டிலும் குத்துச்சண்டைக்கான டைமரைப் போட்டு வைத்து முதலில் தாங்குதிறன் பயிற்சியை எடுக்க ஆரம்பித்து விட்டு வழக்கமான குத்துச்சண்டைப் பயிற்சியைச் செய்ய ஆரம்பித்தேன். மெல்ல மெல்ல என் தாங்குதிறன் அதிகரித்தது. கடந்த இரு நாட்களாக ஒன்றை கவனிக்கிறேன்: அவர்கள் எனக்குக் கற்றுத் தரும் காம்பினேஷன்கள் இப்போது வேகமாகப் பயில வருகிறது. முன்பு பலவிதமான குத்துக்களை அடுத்தடுத்து விடுவதும் நொடியில் உத்தியை மாற்றுவதும் எனக்கு வராது. ஒவ்வொன்றையும் தனித்தனியாக மட்டுமே விட முடியும். ஜாப், கிராஸ் என்றால் அது மட்டுமே விடுவேன், வாய்ப்புக் கிடைக்கும்போது ஒரு ஹூக் அல்லது அப்பர் கட். இப்போதோ ஒரு எதிராளியை எப்படி காம்பினேஷன்களால் ஏமாற்றி கவனத்தைத் திருப்பி குத்துவது எனக் கற்றுக் கொள்கிறேன்.
நான் அண்மையில் கற்றுக் கொண்ட மேலும் இரு விசயங்கள்:
ஸ்லிப்பிங் - நான் அமர்ந்த வாகில் பழகுவதால் தோளுடன் தலையை லேசாகத் திருப்பிச் செய்யும் ஸ்லிப்பிங் எனக்கு சற்று சிரமமாக இருந்தது. ஒவ்வொரு முறையும் என் சமநிலை போய் சரிந்துவிடுவேன். இதை இங்கு வந்த பின்னரே பயிற்சி செய்து ஆட்கொண்டேன். நேற்று எந்தளவுக்குக் குறைவாக தலையையும் தோளையும் சரித்து ஸ்லிப் செய்ய வேண்டும் எனப் பயின்றேன். இது வேகமாக எதிராளியின் குத்தைத் தவிர்த்து மறுகுத்து விட உதவுகிறது.
தோள்களை லகுவாக வைத்துக் கொள்வது - இது எனக்கு ரொம்ப நாட்களாக வராமல் இருந்தது. ஏனென்றால் நான் தன்னிச்சையாகவே வலுவாகக் குத்துவதில் ஆர்வம் கொண்டிருந்தேன். இங்குதான் வேகமே வலுவை விட முக்கியம் எனப் புரிந்துகொண்டு அதற்கு எப்படி உடலைப் பயன்படுத்துவது எனப் புரிந்து கொண்டேன். இப்போது தோள்கள் இயல்பாகவே லகுவாகின்றன. தளர்வாக அகல வைத்துக் கொண்டு கைகளை வீச முடிகிறது. தேவையானபோது மட்டும் வலுவை அதிகப்படுத்த முடிகிறது. இதன் பலன்தான் ஒன்றரை மணிநேரத்துக்கு மேலாக குத்த முடிவது.
கடந்த ஆண்டு தொடர்ந்து சில மாதங்கள் இடது கையால் மட்டுமே குத்திப் பயிற்சி செய்தததன் விளைவாக என் இடக்கையின் வேகமும் வலுவும் அதிகரித்து விட்டது. நீங்க சவுத் பாவா என்று சில நாட்கள் அடுத்தடுத்து கேட்டு விட்டனர். ஆனால் எனக்குத்தான் அந்த வலு போதாது, இன்னும் வேண்டுமெனத் எனத் தோன்றுகிறது.
ஜெனஸிஸுக்குச் சென்றது நான் எடுத்த சரியான முடிவுதான் என இப்போது தோன்றுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...