ஆம், விஜய்க்கு பல ஆண்கள் ரசிகர்கள் உள்ளதைப் போன்றே ரசிகைகளும் உள்ளனர். அவர்கள் அவரிடத்துக் காட்டும் விருப்பத்தைப் பார்க்கையில் நமக்கு (ஆண்களுக்கு) பொறாமையாகத்தான் இருக்கிறது. அது அந்த விருப்ப வடிவத்தின், மொழியின் பிரச்சினைதானே ஒழிய அது ஒரு அரசியல் பிரச்சினை அல்ல.
ஒரு பெண் தன் ரசிக மனநிலையில் விஜய்க்கு வாக்களித்ததாகச் சொல்லிவிட்டு அவரது ஆட்சியில் தான் மின்சாரம் இன்றி துன்பப்படுவதாகச் சொன்னால் ஒரு கும்பல் போய் அப்பெண்ணை மானவாரியாகத் திட்டுகிறார்கள். "அனுபவி, சாவு" என சபிக்கிறார்கள். இது நம் மக்களாட்சி முறையின் பிரச்சினைதான் - கொள்கைக்காகத்தான் வாக்களிக்க வேண்டும் என நம் அரசியல் சட்டம் சொல்லவில்லை. நாம் நம் மக்களுக்கு எப்படி வாக்களிக்க வேண்டும் எனப் பயிற்சியளிப்பதும் இல்லை. அதனால் நாம் இன்னொரு கேள்வியை எழுப்பிப் பார்க்கலாம்: இலவசப் பேருந்து எனும் 'சமூக நீதித்' திட்டத்தினால் பயன்பெற்ற ஒரு பெண் இருப்பார். அவர் திமுகவுக்கு அதனால் வாக்களிக்கிறார் எனில் அவர் வீட்டில் படித்து விட்டு வேலையில்லாமல், அடுத்த கட்டத்துக்கு நகர முடியாமல் இருக்கிற ஒரு மகன் இருக்கலாம். அவருக்கு இந்த அரசு எதுவும் பண்ணவில்லையே? அவருக்கு எனத் தனித்திட்டங்கள் இல்லையே. அதாவது இன்று திட்டங்கள் ஒரு தலைப்பட்சமாக பெண்களுக்காகவே மிகுதியாக ஒதுக்கப்பட்டு பெரும் நிதியும் அரசாலும் உலக வங்கியாலும் வழங்கப்படுகின்றன. ஆனால் வேலையில்லாமல் படிப்பில்லாமல் சிரமப்படுவோரில் ஆண்களே அதிகம் என ஆய்வு சொல்கிறது. இப்போது நாம் அப்பெண்ணைத் திட்ட முடியுமா? அது நியாயமா? இல்லை. கூடாது. தனிமனிதர்கள் தம் தேவைகளைத் தம்மைப் போன்றோரை ஒருங்கிணைத்து முன்வைத்து அரசிடம் அழுத்தம் போட வேண்டும். மெல்ல மெல்ல ஒருநாள் அதற்கு பலன் கிடைக்கும். மக்களாட்சியில் வேறு வழியில்லை. ஒரு திட்டத்தினால் பலனடைவோரை நாம் எப்படிப் பழிப்பதில்லையோ அப்படித்தானே ரசிக மனநிலையில் வாக்களிப்பவர்களையும்?
இரண்டிலும் ஒருவித தன்னலம் உண்டு. ஒன்று நேரடி வாழ்க்கை சம்மந்தப்பட்டதெனில் இன்னொன்று வெறும் உணர்வு சம்மந்தப்பட்டது என்றாலும் கூட. ஒன்று மற்றொன்ற விட சற்றே மேம்பட்டது என்றாலும் கூட அதற்கான சுதந்திரமே மக்களாட்சி.
நம்மால் இவர்களைத் திருத்த முடியாது. ஆனால் உரையாடலாம். தமிழ்நாட்டில் அந்த உரையாடல் நடக்காமல் அதை ஒரு இணைய யுத்தமாக மாற்றுகிறோம். கிண்டல், பரிகாசம், கேலி நம்மைப் பிளவுபடுத்தி எதிர்த்தரப்பைப் பலப்படுத்தும் என நினைக்கிறேன். வாக்களிப்பவர்கள் எப்போதுமே ஏமாற்றப்படுவோர்தாம். ஏனெனில் நமது மக்களாட்சி அமைப்பு நேரடியானது அல்ல, அது பிரதிநுத்துவ பாணியிலானது. ஆகையால் வாக்களித்ததும் நம்மைப் போல அவர்களும்தாம் அதிகாரம் இழக்கிறார்கள். மின்வெட்டும் பல்வேறு நிர்வாகப் பிரச்சினையும் அவர்களையும்தாம் பாதிக்கும். சில திட்டங்கள் பரந்துபட்ட பலனைத் தரவில்லையெனில் அவை பெரும்பான்மை மக்களுக்குத் துன்பம் தரும்தான். பலனடைவோரும் அதனால் மறைமுகமாகப் பாதிக்கப்படுவோரே. இதனாலே கடைசியில் வாக்களித்த பின்னர் எல்லாருமே அனாதைகள் என்கிறேன். வாக்காளர்கள் இடையில் ஒற்றுமை வரும்போதே பிரச்சினைகள் தீரும்.
இதைக் குறித்த உங்கள் கருத்துக்களைப் பகிருங்கள்.
கருத்துகள்