முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தியாவை நோக்கி 'முதலாம் உலக நாட்டு' பல்கலைக்கழகங்கள் ஏன் வருகிறார்கள்?

Five Global Universities to Establish Campuses in India by 2027, ETEducation 

புனைவெழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான கார்த்திகைப் பாண்டியன் உயர்கல்வித் துறையில் தோன்றி வரும் நெருக்கடியைக் குறித்த ஒரு முக்கியமான பதிவை எழுதியிருக்கிறார். அதில் அவர் தமிழ்நாட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைவதால் மேலடுக்கு கல்லூரிகள் தம் சேர்க்கை எண்ணிக்கையைப் பலமடங்காக அரசின் அனுமதியுடன் உயர்த்தி இரண்டாம் நிலைக் கல்லூரிகளுக்குப் போகிற மாணவர்களை உறிஞ்சிட இரண்டாம் நிலைக் கல்லூரிகள் மூன்றாம் நிலைக் கல்லூரிகளை இவ்வாறே உறிஞ்சிட ஒட்டுமொத்தமாக சூழல் அமைப்பில் முதல் இரு அடுக்குகளில் உள்ள கல்லூரிகள் மட்டுமே நிலைக்க முடிகிற நிலை தோன்றி வருவதாகவும் இதனால் இனி அங்கு இடம் பெற முடியாத மாணவர்களுக்கு படிக்கும் வாய்ப்புகள் அருகி விடும் என எச்சரிக்கிறார். இது இன்று உலகெங்கும் தோன்றுகிற சந்தை ஏகபோகப் பிரச்சினையாகும். ஏர்டெல், ஜியோ எனும் இரண்டுக்கு இடையே, அதானி, அம்பானி எனும் இரு முதலைகளுக்கு இடையில் மக்களும் வாடிக்கையாளர்களும் சிக்கிக் கொள்ள, அவர்கள் அரசிடம் உள்ள நெருக்கத்தைப் பயன்படுத்தி விதிமுறைகளை வளைத்து விலையைத் தமக்கு ஏற்றாற் போல மாற்றி வைத்துக் கொள்ள தாராளவாத சந்தை இன்று கட்டுப்படுத்தப்படும் ஏகபோகச் சந்தையாக மாறி வருகிறது. அமெரிக்காவிலும் இதுவே நடக்கிறது. கல்வியில் இது நிகழும்போது மக்கள் இன்னும் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார். ஏனென்றால் இதைத் தடுக்கும் பணியை நவராராளவாத விமர்ச்கர்கள் கூடச் செய்வதில்லை. அவர்கள் வாங்கித் தின்றுவிட்டு அமைதி காக்கிறார்கள். எனக்கு இதை ஒட்டி மற்றொரு விசயத்தையும் குறிப்பிடத் தோன்றுகிறது:

இன்று உலகம் முழுக்க ஏற்பட்டிருக்கக் கூடிய சிக்கல் முதலீட்டிய முடக்கம். அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட முன்னேறிய நாடுகள் பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன. அதனால் பெருநிறுவனங்கள் முதலீட்டை எடுத்துக் கொண்டு வெளியேறுகின்றன. இதனால் மக்கள் வேலையின்மையால் பாதிக்கப்படுகிறார்கள். முதலீட்டு வெளியேற்றமும் பொருளாதார வீக்கமும் உலகம் முழுக்கப் பரவுகிறது. வளரும் நாடுகளில் இருந்து வேலையும் கல்வியும் நாடி வரும் மக்களை இப்போது வளர்ந்த நாடுகள் மறுக்கின்றன. தம் எல்லைக்குள் இடம்பெயர்தலை கறாராக்குகிறார்கள். அமெரிக்கா வணிகப் பரிவர்த்தனைகளை அதிக வரியால் சிக்கலாக்குகிறது. வளத்தைப் பெருக்கி பொருளாதாரத்தைச் சரி செய்ய தொடர்ந்து போர் தொடுக்கிறது. இது பொருளாதாரத்தை அமெரிக்காவிலும் பிற நாடுகளிலும் நலிவடையச் செய்கிறது. கூடவே செய்யறிவின் மீதான அபரித முதலீடுகளும் அச்சத்தை விளைவிக்கின்றன. இவை மூன்றும் சேர்ந்து உலகயமாக்கலை முடிவுக்குக் கொண்டு வருகிறது. ஆகையால் அமெரிக்கா, இங்கிலாந்து, அயர்லாந்து ஆகிய நாடுகளின் கல்விப்புல வணிக நிறுவனங்கள் (அதாவது கல்லூரிகள், பல்கலைகள்) இரண்டாம் காலனியாதிக்கப் படையெடுப்புக்குத் தயாராகின்றன. இரண்டாம் உலக நாடுகளை, வளரும் நாடுகளை நோக்கி வந்து அங்கு கடைபரப்பப் பார்க்கிறார்கள். அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களின் வருகையின் நோக்கம் இதுதான் - உள்நாட்டில் இனி புலம்பெயரும் நோக்கில் மாணவர்கள் வர மாட்டார்கள், அரசும் அதை அனுமதிக்காது. அதனால் மாணவர்களை அவர்களுடைய நாட்டுக்கே சென்று பிடிக்கிறார்கள். இங்குள்ள மாணவர்களுக்குப் பெரும்பாலும் இங்குள்ள ஆசிரியர்களை வைத்தே பாடமெடுப்பார்கள். பாடத்திட்டமும் பிராண்டும் அவர்களுடையது. இப்போதைக்கு அதிக மாணவச் சேர்க்கைக்குச் சாத்தியமுள்ள படிப்புகளை மட்டுமே அறிமுகப்படுத்துகிறார்கள். கட்டணம் மிக அதிகம். அதை நியாயப்படுத்த அவர்களுடைய சான்றிதழ்களில் இந்தியாவில் படித்ததான அறிகுறிகள் இருக்காது எனச் சொல்வார்கள். அதாவது இந்தியாவிலேயே படித்துவிட்டு அமெரிக்காவில் படித்ததாக பட்டம் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் இந்த மோசடியும் ரொம்ப நாள் நீடிக்காது. உலகப் பல்கலைக்கழகங்கள் அதிக எண்ணிக்கையில் மாணவர்களைத் தேர்வு பண்ணி அனுப்ப வேண்டிய நெருக்கடி இந்தியாவில் ஏற்படும். அதனால் அத்தகைய சான்றிதழ் கொண்டவர்கள் பெருகுவார்கள். மதிப்பு குறையும். இங்குள்ள சந்தைக்கு ஏற்ப கல்வியைப் போதித்து சம்பாதிக்க வேண்டுமெனில் தரமான கல்வி அளிக்க முடியாது. அப்பாதையில் அவர்கள் போனால் அவர்களுடைய பெயரும் கெடும்.
இந்த உலகப் பல்கலைக்கழகங்களில் முதல் சில ஆண்டுகளில் சேர்கிற மாணவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் மட்டும் பயனிருக்கும். போகப்போக அவை 'இந்தியமயமாக' அவர்கள் அதிருப்தியாவார்கள். அடுத்த 5 ஆண்டுகளில் இங்கு பொருளதார வீழ்ச்சி அதிகமாகும் என்பதால் இந்த பல்கலைக்கழகங்கள் கடையை மூடிக் கொண்டு போகவும் வாய்ப்பதிகம். உலகமயமாதலின் இறுதிக் கட்ட வணிக நடவடிக்கை எனும் அளவில் பிரகாசமாக எரிந்துவிட்டு அணைந்துவிடும்.
நாம் இவர்கள் வந்தால் என்னவாகும் எனக் கவலைப்படுவது நியாயமானதே. அதேநேரத்தில் இவர்கள் ஏன் வருகிறார்கள் எனப் புரிந்துகொண்டால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும். மாணவர்கள் தம் பணத்தை வீணடிக்காமல் கவனமாக இருக்கலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...