முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அசிரத்தையின் காலம்

 நாம் குழந்தைகளுக்கான பள்ளிக்கூடங்களைத் தேர்வு பண்ணும்போது அதன் உட்கட்டமைப்பையும் செழிப்பையும் பிரதானமாகக் கருதுகிறோம். அடுத்து வீட்டுக்கு அருகில் உள்ளதா என்பதையும். அங்குள்ள ஆசிரியர்கள் எந்தளவுக்கு தீவிரத்துடன் ஆர்வத்துடன் பணியாற்றுகிறார்கள் என்பதைப் பொருட்படுத்துவதே இல்லை. ஆனால் அந்த விசயம்தாம் அவர்கள் செலுத்தும் கட்டணம் வீணாகுமா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும்.

என்னிடம் ஒரு மாணவர் வந்தார். அவர் எந்த வாக்கியத்தை எழுதினாலும் அது தாறுமாறாகத்தான் இருக்கும். இலக்கணப் பிழைகள் போக சொற்பிழைகள் மலிந்திருக்கும். ஒட்டுமொத்த வாக்கியமும் கேரம் போர்டில் காயின்கள் சிதறிக் கிடப்பதைப் போலத்தான் இருக்கும். அவரது தாயிடம் பேசும்போது அவர் தான் சொந்தமாக ஒரு பள்ளியை நடத்துவதாகவும் அங்குதான் பத்தாண்டுகளுக்கு மேலாகத் தன் மகன் படித்ததாகவும் அவரது மொழிப் போதாமையைக் குறித்து ஆசிரியர்கள் புகார் சொல்லிக் கொண்டே இருப்பார்கள் என்றும் இதுவரை அதைச் சரிசெய்ய முடியாது என்றார். மொழி அறிவானது இயல்பாகவே எல்லாருக்குள்ளும் உள்ளது என்பதால் அதைச் சரிசெய்வது சுலபம் என்பது என் நம்பிக்கை. ஆகையால் அவர் சொன்னது எனக்கு வினோதமாக இருந்தது. நான் அந்த மாணவருக்கு சில பயிற்சிகள் அளித்து எழுத வைத்துச் சோதித்தேன். பல கோணங்களில் அலசினேன். ஒவ்வொரு முறையும் என்னுடைய கணிப்புப் பொய்த்து விடும். ஆறு மாதங்களுக்குப் பிறகே ஒரு உண்மையைக் கண்டுபிடித்தேன். அம்மாணவருக்கு மொழியைக் கற்பதில் நம்பிக்கை இல்லை. அதனாலே அவர் தவறாக எழுத்கிறார். அவருக்கு மொழியின் முக்கியத்துவத்தைப் போதித்துப் புரிய வைக்க முடியாது. அதை உணர்வுரீதியான பிடிப்பின் வழியாக மட்டுமே ஏற்படுத்த முடியும் எனக் கண்டுகொண்டேன். மெல்ல மெல்ல அவரிடத்து எனக்குள்ள அக்கறையை அவருக்குப் புரிய வைத்தேன். அதன் பிறகு அவர் எனக்காக தன் மொழியறிவை மேம்படுத்த முடிவெடுத்தார். அதாவது தனக்குப் பிடிக்காத ஒன்றை எனக்காகச் செய்ய முன்வந்தார். ஒரே ஒருநாள் அவருடன் இருந்து சில பிழைகளைச் சுட்டிக் காட்டித் திருத்தச் சொன்னேன். அந்த ஒரே அமர்வில் அவரது எழுத்து 50% மேம்பட்டது. 20-30% மதிப்பெண் பெறுகிறவர் ஒரே மாதத்தில் அதன் பிறகு 70% மதிப்பெண்ணுக்கு உயர்ந்தார். இத்தனை ஆசிரியர்களால் இதுநாள் வரைக்கும் செய்ய முடியாததை நீங்கள் சாதித்துவிட்டீர்கள் என அவரது தாய் என்னிடம் நன்றி சொன்னார். நான் எதையும் புதிதாகச் சொல்லிக் கொடுக்கவில்லை, அவருக்குள் நம்பிக்கையை மட்டுமே விதைத்தேன் என நான் நினைத்துக் கொண்டேன்.
இந்தச் சின்ன விசயத்தை இத்தனை வருடங்களாக ஏன் எந்த ஆசிரியரும் செய்யவில்லை என்பதே என்னைக் குழப்பியது. அதன் பிறகு அத்தகைய மாணவர்களை அடிக்கடிப் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். கூடுதலாக கவனமும் தன்னம்பிக்கையும் இருந்தால் சரிசெய்யக் கூடிய மொழிப் பிரச்சினையே அவர்களுக்கு இருக்கும். அவர்கள் சிந்திக்கும் விதமே சிதறலாக இருக்கும், அதை அப்படியே மொழியில் கொண்டு வருவார்கள். இது மொழி அறிவீனமோ கற்றல் குறைபாடோ அல்ல. நமது மொழியும் பிரக்ஞையும் ஒன்றுதான். மொழியைக் கொண்டு நாம் பிரக்ஞயைச் சீர்படுத்திக் கொண்டு செறிவாக்கியபடியே இருக்கிறோம். அதனாலே நம்மால் தெளிவாகப் பேசவும் எழுதவும் முடிகிறது. இது இயலாத மாணவர்கள் இருப்பார்கள். அவர்களைப் பல வகுப்புகளில் சுத்தமாகக் கவனிக்காமல் விடுகிற மொழி ஆசிரியர்களே அதிகம். ஆசிரியப் பணி எந்திரத்தனமாகி விட்டதே முக்கிய காரணம்.
ஏனெனில் கல்வி நிலையங்களும் அவ்வாறே மாணவர்களைப் பார்க்கும்படி ஆசிரியர்களைத் தூண்டுகின்றன. கல்வி போதனைக்கு அப்பாலான வேலைகள் குவிகின்றன. கற்பித்தல் வெறும் அசிரத்தையான அன்றாட வேலையாகி விடுகிறது. இன்று நாம் பார்க்கும் பல தொழில்சார் ஆசிரியர்களுக்கு தம் பணியிடத்து ஒருவித பித்து இல்லை. வேலையைக் காப்பாற்றுவது, சம்பாதித்து இ.எம்.ஐ கட்டுவது, கேளிக்கையில் ஈடுபடுவது எனக் கற்பித்தலுக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையில் ஒரு இடைவெளியை வைத்திருக்கிறார்கள். அவர்கள் கற்பித்தலை ஒரு அதிகாரத்துவ பணியாக மாற்றி விட்டனர். தம்மிடம் வரும் மாணவர்களை மனிதர்களாகவே பாவிப்பதில்லை. அப்படிச் செய்தால் தம் பணி அதிகரித்து விடுமோ என அஞ்சுகிறார்கள். குழந்தைகள் அவர்களுக்கு கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர் மட்டுமே. இப்படி யோசிக்கிறவர்களுக்கு ஏற்பவே இன்றைய நிறுவனங்களின் நடைமுறைகளும் இருக்கின்றன. எனக்கென்னவோ பெற்றோர், குழந்தைகள், ஆசிரியர்கள் எல்லாருமே கண்ணை மூடிக்கொண்டு தம் பாட்டுக்கு நடந்து போவதாகத் தோன்றுகிறது.
நான் என் நண்பர்கள் சிலரிடம் பேசும்போது அசிரத்தையாகப் பணி செய்பவர்களே இன்று எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கிறார்கள், தாம் வேலைக்கு ஆள் தேடும்போது வேலையைப் பொறுப்பாகச் செய்து முடிப்போரைக் கண்டுபிடிக்க பெரும்பாடாகி விடுகிறது என்கிறார்கள். இப்போக்கை நான் பல இடங்களிலும் பார்க்கிறேன்.
நான் காலில் அணியும் கேலிப்பரைச் செய்வதற்காக பெங்களூரில் உள்ள மொபிலிட்டி செண்டருக்கு கடந்த எட்டு மாதங்களில் 6 முறைகள் நான் போக வேண்டி இருந்தது. ஒவ்வொரு முறையும் அளவெடுத்து எதாவது மாற்றத்தைச் சொல்லி திருத்துவார்கள். கடைசியில் அவர்கள் கொடுத்த காலிப்பரை என்னை அணிய வைத்து நிற்க வைத்து சரி பார்த்தார்கள். நான் நேராகத் தடுமாற்றமில்லாமல் நிற்கிறேனா என்பதில் அந்த காலிப்பர் செய்பவர் கவனம் செலுத்தினார். நான் நடப்பதை அல்லவா இவர் கவனிக்க வேண்டும் எனக் குழம்பினேன். அக்காலிப்பரில் என்னுடைய கணுக்கால் பகுதியில் அசைவு போதுமானதாக இல்லை என்று நான் சொன்னதை அவர் ஆரம்பத்தில் இருந்தே பொருட்படுத்தவில்லை. நான் கடைசியாக காலிப்பரைப் பெற்று நடந்தபோது எதுவோ சரியாக இல்லை எனத் தோன்றியது. எங்களில் இருவருக்குமே அது என்னவெனத் தெரியவில்லை. அவர் ஏதோ ஒரு சின்னத் திருத்தத்தைச் செய்து என்னை நடக்கக் கேட்டார். இரு வாரங்களாக நான் அதை வைத்து நடக்க முடியாமல் சிரமப்பட்டு வந்தேன். காலைத் தூக்கி நடக்கும்போது என் பாதம் சரியாகப் பதிந்து மேலே வருவதில்லை. அது ஏனெனத்தான் தெரியவில்லை. அதைக் குறித்து தொடர்ந்து யோசித்துக் கொண்டே இருந்தேன். ஒருநாள் மாலையில் எதையோ படித்துக் கொண்டிருந்தபோது எனக்கு உண்மை புரிந்தது. அந்த கணுக்கால் பகுதி அசைவின்றி இறுக்கமாக அமைக்கப்பட்டிருந்ததே காரணம். நான் என் பழைய காலிப்பரை எடுத்து அதன் கணுக்கால் பகுதியுடன் இதை ஒப்பிட்டு அசைத்து வித்தியாசத்தை எடுத்துக் காட்டி ஒரு காணொளி பதிவு செய்து அந்த காலிப்பர் செய்பவருக்கு அனுப்பிக் கொடுத்தேன். அவர் இப்போது ஒப்புக் கொண்டார். என்ன பிரச்சினை என்றால் இதை நான் இத்தனை நாட்களாகப் போராடி ஆய்வு செய்து கண்டுபிடிக்கக் கூடாது. இதைத் தன் சுயமுயற்சியால் கண்டறிவது நிபுணரான அவரது பணி. ஆனால் அவரைப் போன்றவர்கள் அந்தளவுக்கு அக்கறையாகப் பணியில் இருப்பதில்லை. தம் பணியே தம் உயிரெனக் கருதி அதைக் குறித்து சதா சிந்தனையில் இருந்தாலே தீர்வுகள் புலப்படும். இத்தனைக்கும் அவரும் ஒரு மாற்றுத் திறனாளி. என்னைப் போல காலிப்பர் அணிபவர்.
நிபுணர்களை நம்பி ஒரு பணியை ஒப்படைத்து ஹாயாக நாம் அமர்வது இனிச் சாத்தியமில்லை. அவர்கள் எதையும் பாதிதான் செய்வார்கள். அவர்களுக்குப் பணம் கொடுக்கும் நாம் தான் மீதியைச் செய்ய வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு ஏன் க்யானேஷ் குமாருக்கு எதிராகப் பொங்குவதில்லை?

  சினிமா போதையின் பிரச்சினைகளைப் பற்றி தமிழ்நாட்டு எழுத்தாளர்களே தொடர்ந்து அழுது புலம்பி சபித்து சமாதானமாகி இருக்கிறார்கள் இதுவரை. ஆனால் இப்போது முதன்முறையாக வெகுமக்கள் இடையில் சினிமா வெறியர்கள் அரசியல்மயமாவதற்கு எதிர்ப்பு வந்திருக்கிறது. குறிப்பாக 40-70 வயதுக்கு உட்பட்டோர் பேசுவதைக் கேட்டால் புரியும். அரசியல் நோக்கர்களும் இதனால் கசப்படைகிறார்கள். தமிழ்நாட்டினர் எப்படி மூளைச்சலவை செய்யப்பட்டனர் என திருப்பூர் குணாவும், ஜீவாவும், ஆர்.கே. சண்முகவேலும் சேர்ந்து ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார்கள் ("டிஜிட்டல் போதையில் நாம் யாரையும் தேர்ந்தெடுக்கவில்லை"). அவர்கள் சமூகவலைதளச் செயல்பாடுகளும் தரவுப் பகுப்பாய்வுத் தொழில்நுட்பமும் விஜய்யின் வெற்றிக்கு எப்படிப் பயன்பெற்றன என்றே பிரதானமாகப் பேசினாலும் விஜய்யின் சினிமாப் புகழ் அவரை வைத்து நடந்த டிஜிட்டல் பிரச்சாரத்துக்கு அடிப்படை என்பதை அவர்கள் மறுக்கவில்லை. கடந்த தேர்தலின் போதிருந்தே 'தற்குறி' எனும் சொல் இதற்கென மக்களால் பரவலாகப் பயன்படுத்தப்படுவதையும் பார்க்கிறோம். 'தற்குறி' சினிமா ரசிக மனநிலை, சினிமா மந்தைத்தனம் ஆகியவற்றை...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

மனதுக்குள் நடக்கும் ஆட்டம்

  ரொம்ப நாட்களுக்குப் பிறகு இன்றைய இந்தியா நியுசிலாந்து டி20ஐ போட்டியை வெகுவாக ரசித்தேன். முதல் போட்டியில் 225 அடித்தும் வெல்ல முடியவில்லை என்பதை விட நியுசிலாந்தை மற்றொரு விசயம் வெகுவாக வருத்தியது - அவர்களால் பவர் பிளேயைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அபிஷேக் ஷர்மாவும், சஞ்சு சாம்ஸனும் வேகவீச்சாளர்களை அடிக்கிற பாணி அவர்களை மனதளவில் உலுக்கி எடுத்துவிட்டது. ஆகையால் இரண்டாவது போட்டியின் ஆடுதளத்தை மாற்றினார்கள். கொஞ்சம் நின்று வருகிற ஆடுதளத்தைத் தேர்வு பண்ணினார்கள். இந்தியா ஒரு சுழலருடன் ஆடுவதும் நியுசிலாந்து இரு சுழலர்களுடன் ஆடுவதும் மற்றொரு காரணம். ஆகையால் பவர் பிளேவை ஆதிக்கம் செய்தால் இந்தியாவை 140-150க்குள் சுருட்டலாம். முதலில் மட்டையாடும் பட்சத்தில் தாம் 170-180 அடித்தால் கூடப் போதும். அதை வைத்துத் தடுத்தாடலாம் என நம்பினர். இதே திட்டத்தைத்தான் அயர்லாந்தும் இங்கிலாந்தும் கூட அண்மையில் இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்தினர். ஆனால் அந்தத் திட்டம் இரண்டு கட்டங்களில் அவர்களுக்கு வேலை செய்யவில்லை. 1) அவர்களுடைய வேகவீச்சாளர்கள் ஒரு சிக்ஸர் / பவுண்டரி கொடுத்ததுமே பந்தின் நீளத்தை இழுத்து ஷார்...