சவுக்கு சங்கரின் “உளவு-ஊழல்-அரசியல்” நூலின் ஆக சுவாரஸ்யமான பகுதி அவரது சிறை அனுபவங்கள்தாம்; முதலில் சிறைச்சூழல் அவரை அச்சுறுத்துகிறது; பின்னர் போகப் போக அங்குள்ள மனிதர்கள் மற்றும் உணவு உள்ளிட்ட நடைமுறைகளுடன் இணங்கிப் போகிறார்; எவ்வளவு வெகுளியான அன்பான, அதே நேரம் குரூரமான, மனிதர்கள் அந்த புழல் சிறைக்குள்ளே. ஆனால் வெளியே உள்ள மனிதர்களின் ஏமாற்றுத்தன்மை இவர்களிடம் இல்லை. நாம் பேசும் ஒரு சிறிய பொய்யை மறைக்கக் கூட ஆயிரம் கதைகளைப் புனைவோம். ஆனால் இந்த கைதிகள் தம் குற்றங்களைப் பற்றி அவ்வளவு வெளிப்படையாகப் பேசுகிறார்களே என வியந்தேன். நல்லவன்-கெட்டவன் எனும் இருமை இல்லாத அந்த வெளி சுலபத்தில் உங்களை பரிசுத்தமாக்கி விடுகிறது. காலை ஐந்தரைக்குத் தேநீர், அடுத்த இரு மணிநேரங்களில் காலை உணவு (பொங்கல்), அதன் பிறகு செய்தித்தாள் (தந்தி) / வார இதழ்கள் (விகடன், குமுதம்), சக-கைதிகளுடன் அரட்டை, மதிய உணவு, மாலை ஐந்தரைக்கு இரவுணவு, வாரம் ஒருமுறை சிக்கன் என வசதியாகத் தான் இருக்கிறது. (நடுவே சில இலக்கிய உரைகளை நுழைத்தால் விஷ்ணுபுரம் இலக்கிய விழா தோன்றி விடும்.)