வாஸ்தோவின் “போஹோவை” ஒரு மாதிரி ஹிப்பி நாவல் என்று கூறலாம். இவ்வகை நாவல்களில் நகர / கிராமிய மத்திய வர்க்க வாழ்க்கை சற்று எதிர்மறையாகவும், எந்த பிடிப்புமில்லாத பயண / சாலை வாழ்க்கை உன்னதமாகவும் காட்டப்படும். சமூக வாழ்க்கையின் காயங்களை சமூக பந்தமற்ற ஒரு வாழ்க்கை குணப்படுத்தும் என்றும் இவ்வகை கதைகளில் சொல்லப்படும். வாசகர்களில் பலரும் உள்ளூர ஏங்குவது எல்லாவற்றையும் அறுத்துப் போட்டுவிட்டு ஓடி விடவேண்டும் என்பதையே, ஆனால் அவர்களால் அதை செய்ய முடியாது. அதனாலே இத்தகைய கதைகளுக்கு எப்போதும் மவுசிருக்கும், விட்டு விடுதலையாகும் சாகச வாழ்க்கை திரும்பத் திரும்ப ரசிக்கப்படும். ஆனால் வாசகன் சமூகத்துக்குள் இருப்பவன் என்பதால் இக்கதைகளில் நாயகன் திரும்ப ஊருக்கு வருவான். (அல்லது சமூகத்தில் இருந்து புறவெளிக்கு எதிர்காற்றில் மயிர்க்கற்றைகள் அலைய பைக்கில் பிறந்து போவான்.) அதுவே நாவலுக்கு ஒரு முழுமையை கொடுக்கும். இறுக்கம்-கசப்பு-விடுதலை-திகைப்பு-மீண்டும் திரும்புதல் என்பதே ஹிப்பி நாவலின் இலக்கணம். வாஸ்தோ இந்த கதையமைப்பை காதல், மனமுறிவு, குற்றம், தப்பித்து ஓட்டம், பைக் ரைடிங் அனுபவங்கள், மனம் ஆற்றுப்படுதல் எனும் ...