5. உங்களின் தற்போதைய சிந்தனையையும் இலட்சியங்களையும் எவ்வாறு கண்டடைந்தீர்கள்? அந்தப் பயணம் குறித்து சற்றே வெளிச்சம் பாய்ச்சுவீர்களா? பதில்: என் அப்பாவுக்கு திராவிட சிந்தனைகளில் ஆர்வம் இருந்தது. அவர் வாயில் இருந்து ஓராயிரம் முறைகள் பெரியார், அண்ணா, கலைஞர் பற்றிய புகழ்மொழிகளைக் கேட்டிருப்பேன். ஆனால் சின்ன வயதில் இவர்கள் என்னை ஈர்க்கவில்லை. பதினைந்து வயதில் நான் அறிமுகம் கொண்ட சிறுபத்திரிகை மரபும் திராவிட சிந்தனைகளில் இருந்து விலக்கியே வைத்தது. ஆனால் பின்னாளில் கிடைத்த அனுபவங்கள் பெரியாரியம் எவ்வளவு முக்கியமான சிந்தனைப் பள்ளி, சாதியம், பாகுபாடுகள் ஆகியவற்றுக்கு மையம் சாராம்சவாதம், இறைநம்பிக்கை எனப் புரிய வைத்தது. பெரியாரிய வாசிப்பு, பௌத்தம் குறித்த வாசிப்புகளும் சிந்தனையும் இந்த நிலைப்பாட்டை இன்னும் ஆழமாக்கியது. இன்னொரு பக்கம் எனக்கு சோஷலிஸ சிந்தனைகளில் உள்ள நம்பிக்கைக்கும் கலை இலக்கிய பெருமன்ற தொடர்புக்கும் சம்மந்தம் உள்ளது. தாராளமயமாக்கல், நவீன பொருளாதாரம் மக்களிடையே ஏற்படுத்தும் பிளவுகள், அநீதியான வாழ்க்கைமுறை, அடிமைத்தனம், சுரண்டல் இதையெல்லாம் காணும் போது மார்க்ஸியத்தில் இருந்தே நமது ந...