அண்மையில் வாசித்ததில் ஒரு மறக்க முடியாத அனுபவம் ராம்ஜியின் “அல்லிக்கேணி”. அவர் இதை பேஸ்புக்கில் எழுதும் போது துண்டுத்துண்டாக வாசித்த போது என்னை பெரிதாக கவரவில்லை. ஆனால் நூலாக வாசிக்கையில் இவரை இவ்வளவு நாளும் கவனிக்காமல் விட்டுவிட்டோமே எனத் தோன்றியது. இந்த நூலில் அப்படி என்ன பிடித்திருக்கிறது? 1) நகைச்சுவை - தனியாக படிக்கையில் பல இடங்களில் சத்தம் போட்டு சிரித்தேன், கூட்டத்தின் நடுவே இருக்கையில் மௌனமாக புன்னகைத்தேன். தமிழில் நகைச்சுவை எழுத்து என ஒரு வகைமை உண்டெனில் நிச்சயமாக ராம்ஜியின் எழுத்து மேல்தளத்தில் இருக்கும். அவர் தன்னை, தன் நண்பர்களை, தோழிகளை, அம்மாவை, அப்பாவை, பிடித்தவர்களை, பிடிக்காதவர்களை என விதிவிலக்கில்லாமல் பகடி பண்ணுகிறார். ஆனால் இவர்களை அவர் தட்டையான கோட்டோவியமாக்குவதில்லை. குள்ளமாக இருந்து தாவித் தாவிட அடிக்கிற அவரது அம்மாவின் பாத்திரம் வேறு சில இடங்களில் அழுத்தமான, முதிர்ச்சியானவராகத் தெரிகிறார். அழகான, கவர்ச்சியான, புத்திசாலித்தனமான தோழியரையும் அபத்தமானவர்களாக காட்டத் தவறுவதில்லை. அவர் யாரையெல்லாம் மகத்தானவர்களாக காட்டுகிறாரோ அவர்களுடைய ஏதாவது ஒரு கோணலையும் காட்டி விட...